10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி


10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி
x
தினத்தந்தி 15 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அதனை பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.

கள்ளக்குறிச்சி

10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதனை வாங்க வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள் உள்ளிட்டவர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என பெரும்பாலான மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அறித்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிக்கன் பிரியாணி வாங்க சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலுக்கு சென்றனர். பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அங்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 10 மணி முதலே முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர்.

200 பேருக்கு பிரியாணி

இந்த நிலையில் காலை 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணங்களை பெற்று கொண்டு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கினர்.

200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கமாக இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேற்று 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.


Next Story