நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட மாணவி சாவு:கோழிக்கடை உரிமையாளர் அதிரடி கைது
நாமக்கல்லில் ‘சவர்மா’ சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரத்தில் கோழிக்கடை உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சிறுமி சாவு
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் துரித வகை உணவகம் (ஓட்டல்) செயல்பட்டு வந்தது. கடந்த 16-ந் தேதி அந்த உணவகத்தில் 'சவர்மா', கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கலையரசி (வயது 14) நேற்றுமுன்தினம் காலை பரிதாபமாக இறந்தார்.
மேலும் அவரது தாயார் சுஜாதா, 12 வயது தம்பி பூபதி உள்பட 4 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுடன் சேர்த்து இதே ஓட்டலில் சாப்பிட்ட 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணி, அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 43 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 குழுக்களாக ஆய்வு
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் உணவகத்தின் உரிமையாளர் நவீன் குமார் மற்றும் சமையலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை வரை கிடைக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 'சவர்மா' மற்றும் கிரில் சிக்கன் உள்ளிட்ட துரித வகை உணவுகளை தயாரிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், துரித வகை உணவகங்களில் 10 குழுக்களாக பிரிந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கோழிக்கடை உரிமையாளர் கைது
இந்தநிலையில் ஐவின்ஸ் உணவகத்திற்கு இறைச்சி மற்றும் கோழிகளை வழங்கியவரும், நாமக்கல், ராமாபுரம்புதூரில் கறிக்கோழி கடை நடத்தி வருபவருமான சீனிவாசன் (43) என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார், நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் பழைய இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டதா?, எந்தெந்த உணவுகளுக்கு இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டது? என்பது குறித்து கோழிக்கடை உரிமையாளர் சீனிவாசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.