தொழிலாளியை கொன்ற கோழிக்கடை உரிமையாளர் கைது


தொழிலாளியை கொன்ற கோழிக்கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோழிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணுடன் பழகியதை கிண்டல் செய்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோழிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணுடன் பழகியதை கிண்டல் செய்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 40). இவர் மார்க்கெட்டில் உள்ள பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு ரத்த காயங்களுடன் குப்புசாமி இறந்து கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து குப்புசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் குப்புசாமியுடன் வழக்கமாக இரவில் மது அருந்தும் நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குமரன் நகரை சேர்ந்த அருண்குமார் (28) என்பவர் குப்புசாமியுடன் மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், குப்புசாமியை அருண்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். போலீசாரிடம் அருண்குமார் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

போலீசில் வாக்குமூலம்

கோழிக்கடை வைத்து நடத்தி வரும் அருண்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த இளம்பெண்ணை அடிக்கடி சந்திக்க வந்து உள்ளார். மேலும் இளம்பெண்ணுடன் அவர் நீண்டநேரம் பேசிக் கொண்டிருப்பதை குப்புசாமி பார்த்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கோழிக்கடைக்கு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது, அங்கு குப்புசாமி மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது அருண்குமார் அந்த இளம்பெண்ணுடன் பழகுவது குறித்து, குப்புசாமி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆத்திரம் அடைந்த அருண்குமார் மது அருந்தி விட்டு, குப்புசாமி வீட்டிற்கு வந்து அவரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story