சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.
கடலூர்,
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 7,8-ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலைய அறக்கட்டளைகள் சட்டத்தின் சட்ட பிரிவு 23 மற்றும் 33-ன்படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம், கோவிலின் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) மற்றும் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் கருத்துகளை அளிக்கலாம் அல்லது அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.