சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்


சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்
x

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை குழுவிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கடலூர்

கடலூர்,

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொதுதீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் வந்த இந்து சமய அறநிலையத்துறை குழுவினருக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வரவு-செலவு கணக்குகளையும் காண்பிக்கவில்லை.

இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கருத்து மற்றும் ஆலோசனையை பொதுமக்கள் ஜூன் 20, 21-ந் தேதிகளில் கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனுவாக அளிக்கலாம். மேலும் தபால் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

3,969 மனுக்கள் பெறப்பட்டன

அதன்படி நேற்று கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இந்த சமய அறநிலையத்துறை விசாரணைக்குழுவினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் சிறப்பு அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான சுகுமார் தலைமையில் வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் குழுவாக வந்து 627 மனுக்கள், தனியாக 18 மனுக்கள், தபால் மூலமாக 24 மனுக்கள், மின்னஞ்சல் மூலமாக 3300 மனுக்கள் என 3 ஆயிரத்து 969 மனுக்கள் வந்துள்ளதாக விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி தெரிவித்தார்.

கோவிலை அரசு ஏற்க வேண்டும்

முன்னதாக மனு அளித்த கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மூத்த துணை தலைவர் ஜெமினிராதா நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. ஆகவே இதற்கென தனி சட்டம் இயற்றி கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும். கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் நலன் கருதி ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்தை முடிக்க வேண்டும் என்றார்.

தீட்சிதர்களை கைது செய்ய...

தெய்வத்தமிழ்ப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், நடராஜர் கோவிலுக்கு தனி செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். அரசு தனிச்சட்டம் இயற்றி நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். கோவிலை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்த தீட்சிதர்களை கைது செய்யவேண்டும் என்றார்.

இதேபோல் பல்வேறு அமைப்பினரும், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கோவிலில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாகவும் பொதுமக்கள் மனு அளிக்க உள்ளனர்.


Next Story