சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் நாரிமன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பல முக்கிய தீர்ப்புகளுக்கு நாரிமன் கருவியாக இருந்திருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர் பாலி நாரிமன் (95 வயது). சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞரான இவர் 1972 முதல் 1975 வரை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
இவர் 1999 முதல் 2005 வரை பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக பாலி நாரிமன் தனது 95-வது வயதில் இன்று காலமானார். டெல்லியில் உள்ள நாரிமனின் வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. நாரிமனின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாரிமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நாரிமன் காலமானார் என்ற செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன்.
ஏழு தசாப்தங்களாக வக்கீலாக அதில் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, அவரது அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் குறிப்பிடத்தக்கது. அவர் பல முக்கிய தீர்ப்புகளுக்கு கருவியாக இருந்திருக்கிறார். மேலும் நீதித்துறையில் அவர் செய்த பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.