பிளஸ்-2 பொதுதேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
பிளஸ்-2 பொதுதேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில், தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.