ரூ.284 கோடி மதிப்பில் குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ரூ.284 கோடி மதிப்பில் குடியிருப்பு கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ. 171 கோடியே 36 லட்சம்செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் ரூ. 10 கோடியே 88 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் ரூ. 1 கோடியே 35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.19.98 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலைப் பூங்கா, இரும்பு மற்றும் எக்கு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள திண்கரை (கான்கிரீட்) சாலைப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள், 5430 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் 518 பயனாளிகளுக்கு அடுக்குமாடி மற்றும் மனைகளுக்கான உரிமை ஆவணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.20 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்தார். மேலும், சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடி மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் ரூ.67 லட்சம் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.