எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.
சென்னை,
வரும் 2024-ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொண்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி தொடர்பான கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்தார். மேலும், தனது பிறந்த நாள் விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்களை அழைத்து, ஒருங்கிணைப்பு முயற்சிக்கு அடித்தளமிட்டார்.
இதற்கிடையே, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதரவை கோரினார்.
இதையடுத்து, ஜூன் 12-ம் தேதி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி மாற்றப்பட்டது. அதன்படி, இந்த கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இக்கூட்டத்தில் தான் பங்கேற்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் தலைநகர் பாட்னா செல்ல உள்ளதாகவும், அங்கு நாளை நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நாளை இரவு அங்கிருந்து சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளை நடைபெறவுள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.