பாட்னா சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னா சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை,
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகின்றன. இதுதொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பேசினார்.
இதையடுத்து நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தின் காரணமாக, ஆலோசனை கூட்டத்தை தள்ளி வைக்க திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த கோரிக்கையை ஏற்று ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்ளும் கட்சிகள் சார்பாக அதன் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பாட்னா வந்தடைந்தார். அப்போது பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில், நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னா சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.