முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறார் - மதுரையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு


அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மதுரையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை


அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மதுரையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை ரிங் ரோடு கலைஞர் அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழா, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பாக ஒருங்கிணைந்து நடத்தபட்டது.

விழாவிற்கு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லோருக்குமான ஆட்சி

கடந்த 2018-ம் ஆண்டு நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போது, இதே மதுரையில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய மாநாடு போல் நடந்தது. அதே போல் தற்போது பேராசிரியரின் நூற்றாண்டு விழாவையொட்டி விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கும் இந்த விழாவும், மிக பிரமாண்டமாக நடந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி இங்கு வந்திருக்கிறீர்கள். அவர் என்றும் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்.

அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி கொண்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொன்றாக பார்த்து, பார்த்து செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மழை பெய்தது

உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும் மழை பெய்தது.

எனவே அவர் பேச்சை உடனே முடித்து விடுவார் என்ற எண்ணத்தில் அங்கிருந்த இளைஞர்கள், பேசுங்கள், மழை வந்தாலும் பரவாயில்லை, பேசுங்கள் என்று கோஷமிட்டு கொண்டு இருந்தனர்.

அசையும் சொத்து

முன்னதாக விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர், எல்லா வகையிலும் எனக்கு ஊக்கமளிக்கும் தம்பி உதயநிதி ஸ்டாலின், இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக இருக்கும் எனக்கு, கட்சியின் அசையும் சொத்தாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை பாதுகாப்பது கடமை, என்றார்.

அமைச்சர் மூர்த்தி பேசும் போது, சின்னவர் என்று அழைக்கப்படும் எங்கள் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார். யார் என்ன சொன்னாலும், இன்று இளைஞர்களுக்கு ஒரு தலைவர் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான். கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலாக மதுரை மண்ணில் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்றைக்கு மதுரைக்கு மட்டுமல்ல, தமிழகமே அவர் பின்னால் நிற்கிறது. மதுரையில் இளைஞரணியின் மாநில மாநாடு நடத்துவதற்கு உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Related Tags :
Next Story