டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு..!
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
தஞ்சாவூர்,
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காகஇந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் ஆகும்.
அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த தூர்வாரும் பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதனைத்தொடர்ந்து பூதலூர் தாலுகா விண்ணமங்கலம் பகுதியில் ஆய்வு செய்து விட்டு செங்கரையூர் வழியாக திருச்சி மாவட்டம் செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு விட்டு விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் தஞ்சை வருகையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.