4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு


4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) ஆய்வு செய்கிறார்.

நாகப்பட்டினம்

-

நாகையில், 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) ஆய்வு செய்கிறார்.

நாகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் வேளாங்கண்ணிக்கு வந்த முதல்-அமைச்சர் அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் இரவு தங்கினார்.

காலை உணவு விரிவாக்க திட்டம்

நேற்று காலை வேளாங்கண்ணியில் இருந்து காரில் புறப்பட்ட முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளை சென்றார். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான முதல்-அமைச்சர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் வேளாங்கண்ணியில் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது வழி நெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆய்வு கூட்டம்

தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதில் உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கூட்டத்தை முடித்து விட்டு காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்ற முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.

4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

இன்று (சனிக்கிழமை) காலை வேளாங்கண்ணியில் இருந்து காரில் புறப்பட்டு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து வேளாங்கண்ணி தனியார் விடுதிக்கு செல்லும் அவர் அங்கு மதிய உணவு அருந்துகிறார். இதைத்தொடர்ந்து கார் மூலம் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) பவித்திரமாணிக்கத்தில் நடக்கும் செல்வராஜ் எம்.பி. இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து கார் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.


Next Story