முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு வருகை நாள் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிப்பு
டிரோன் பறக்க தடை விதிப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு இன்று (வியாழக்கிழமை) வருகிறார். இதையொட்டி நாள் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோவை செல்கிறார். அங்கிருந்து ஈரோட்டுக்கு சாலை மார்க்கமாக வருகிறார். ஈரோடு பெருந்துறைரோடு மேட்டுக்கடையில் உள்ள தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அதன்பிறகு அவர் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு கரூருக்கு சென்று இரவு தங்குகிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் செல்லும் சாலைகளில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
டிரோன் பறக்க தடை
மேட்டுக்கடை தங்கம் மகாலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் பாதுகாப்புக்காக மாவட்டத்தில் டிரோன் கேமரா பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) வருகிறார். எனவே நாள் முழுவதும் டிரோன் கேமரா பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது", என்று கூறிஇருந்தார்.