முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந் தேதி மதுரை பயணம்: 5 மாவட்டங்களில் கள ஆய்வு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந் தேதி மதுரை பயணம்: 5 மாவட்டங்களில் கள ஆய்வு
x

திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு செல்கிறார்.

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

முதல் கட்டமாக கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சிப்பணிகள்

கள ஆய்வு பணியின்போது, மாவட்டங்களில் நடக்கும் நிர்வாக பணி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டப்பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது விவசாய சங்க பிரதிநிதிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் கேட்டறிகிறார்.

அதுமட்டுமல்லாமல், போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் மாவட்ட சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் அந்த மாவட்ட திட்ட செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்துவிட்டு, இறுதியில் மாவட்ட கலெக்டர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்வார்.

4 மாவட்டங்கள்

அந்த வகையில் கடந்த 15 மற்றும் 16-ந் தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான கள ஆய்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.

அந்த மாவட்டங்களில் நடக்கும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி கள ஆய்வு செய்துவிட்டு, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அடுத்த 5 மாவட்டங்கள்

இந்த நிலையில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் கள ஆய்வுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு 5-ந் தேதி செல்கிறார். இந்த 5 மாவட்டங்களுக்கான கள ஆய்வை அடுத்த மாதம் (மார்ச்) 5 மற்றும் 6-ந் தேதிகளில் மதுரையில் இருந்தபடி அவர் மேற்கொள்வார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, வேளாண்மை உள்ளிட்ட சில முக்கிய துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், அந்த 5 மாவட்ட அதிகாரிகளுடன் அவர்கள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும், 6-ந் தேதி மதுரையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Related Tags :
Next Story