முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்: 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) திருச்சி செல்கிறார். அங்கு காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்குவதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு மணப்பாறை மொண்டிப்பட்டியில், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2-வது அலகினையும். மணப்பாறை சிப்காட் வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் பிற்பகல் 2.45 மணியளவில், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னாசிப்பட்டியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கி, மருத்துவத்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் நிறுவப்பட்ட மருத்துவ கருவிகளின் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.