முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது - கவர்னர் மாளிகை
கவர்னர் ஆர்.என்.ரவியும், முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலினும் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்
சென்னை,
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அறிவுத்தலின்படி கவர்னர் ஆர்.என். ரவியின் அழைப்பை ஏற்று அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
முதல்-அமைச்சர் மு.க . ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது . கவர்னர் ஆர்.என்.ரவியும், முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலினும் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்
தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆதரவை தருவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உறுதி அளித்தார்.கவர்னர் தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்
இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் . அரசியலமைப்பு சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கவர்னர் உறுதி அளித்தார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.