உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரண தொகையை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரண தொகையை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

உப்பள தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரண தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

உப்பளத் தொழில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும். மழைக் காலங்களில் உப்பளத் தொழில் அடியோடு நிறுத்தப்பட்டுவிடும். இதனால் உப்பளத் தொழிலாளர்கள் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலை உள்ளது. எனவே,மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000/- நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்

மேலும் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், திமுக எம்.பி. கனிமொழி, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story