தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 103 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 103 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் உயரிய நோக்குடன், தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) சிவலிங்கராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.