2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார்..!
2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து திருவாரூருக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் தங்குகிறார். அன்று மாலை திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம் தொடர்பான பணிகளை பார்வையிடுகிறார். அன்று இரவு தனது இல்லத்தில் ஓய்வெடுக்கிறார்.
நாளை(புதன்கிழமை) திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழா மன்னார்குடியில் நடக்கிறது. இந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை திருவாரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு மன்னார்குடி செல்கிறார். அங்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வழியெங்கும் தி.மு.க. கொடிகளை கட்டி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.