'பா.ஜ.க. கவுன்சிலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு'


பா.ஜ.க. கவுன்சிலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு
x

திண்டுக்கல்லை சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு என்று தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை மக்களின் கவனத்துக்கு கொண்டுவரும் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் தேசிய செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், திண்டுக்கல் பஸ் நிலைய கடைகளை ஏலம் விட்டது தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிடும்படி கேட்டு பா.ஜ.க. கவுன்சிலர் தனபாலன் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டதால், அவருடைய வீட்டுக்கு சென்று சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தி.மு.க. சார்பில் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்ட மேடையில், அமைச்சர் இ.பெரியசாமி முன்னிலையிலேயே தி.மு.க. பிரமுகர் ஒருவர், தனபாலனுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசுகிறார்.

தனபாலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான் பொறுப்பு. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மாவட்ட அளவில் அடிப்படை கட்டமைப்புகளை தற்போது செய்து வருகிறோம். தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வருகிற ஏப்ரல் மாதம் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடுவார் என்றார்.


Related Tags :
Next Story