காணி பழங்குடியின மக்களுக்கு நில பட்டா வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் முதல் முறையாக காணி பழங்குடியின மக்களுக்கு நில பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு அணையை ஒட்டி அகஸ்தியர் காலனி, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி, சேர்வலாறு ஆகிய இடங்களில் 158 குடும்பங்களை சேர்ந்த 442 காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மக்கள் பட்டா இல்லாமல் ஒருவித பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதாவது பட்டா இல்லாததால் வன பாதுகாப்பு என்ற பெயரில் அரசு தங்களை வெளியேற்றி விடுமோ? என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற விஷ்ணு காணி பழங்குடியின மக்களை சந்தித்தார். அவர்கள் பட்டா குறித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கையை கலெக்டர் விஷ்ணு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று, தமிழகத்தில் முதல் முறையாக காணி பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி, நெல்லையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக 78 காணி பழங்குடியின மக்களுக்கு தனி நபர் பட்டாவை வழங்கினார்.
இதனால் காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''பட்டா இல்லாததால் எங்கள் வாழ்க்கை இருளாக இருந்தது. தற்போது அரசு எங்களுக்கு பட்டா கொடுத்திருப்பதால் வாழ்வில் வெளிச்சம் கிடைத்துள்ளது. எனவே, முதல்-அமைச்சருக்கும், கலெக்டருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர். முன்னதாக காணி பழங்குடியின மக்கள் தயாரித்த கைவினை பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மனோதங்கராஜ், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் சென்றனர்.