கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திருச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திருச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர்
தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை வந்தார்.
திருச்சியில் தனியார் ஓட்டலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த அவர் பின்னர் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருத்தம் அளிக்கிறது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அதில் 9 பேர் இறந்துள்ளதாக நேற்றிலிருந்து (நேற்று முன்தினம்) ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது.
மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறேன். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இறப்புகள் நடக்குமோ என்ற அச்சத்தில் அவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு மாவட்டம் சுக்கானூர் பெருங்கரணை பகுதியில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் இறந்துள்ள தகவலும் வந்துள்ளது.
ராஜினாமா செய்ய வேண்டும்
நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு பொம்மையான, திறனற்ற முதல்-அமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது கள்ளச்சாராயம் தொடர்பாக நான் பேசியிருக்கின்றேன். அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அதேபோன்று மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளது. அதை பார்த்தாவது விழித்துக் கொண்டு துரிதமாக நடவடிக்கையில் இறங்கி இருந்தால் இறப்புகளை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இந்த கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பெடுத்துக்ெகாண்டு தார்மீகமாக தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தலையீடு அதிகமாக இருக்கிறது
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டுகள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தின் டி.ஜி.பி. முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்காக 2.0 என்றும், அதன் பின்னர் 3.0 என்றும் இப்போது 4.0 என்று ஓ மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார். சட்ட ரீதியாக தடை செய்ய இந்த முதல்-அமைச்சருக்கு திறமை இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (இன்று) காலை மரக்காணம் பகுதிக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் செல்ல இருக்கின்றேன்.
24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள்
தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் திறந்து இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கடைகள் திறந்து இருந்தன. அதேபோன்று தற்போது போலி மதுபானங்களும் அதிகம் விற்கப்படுகிறது. இதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை.
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தெரிவித்து விட்டு ஆயிரம் சில்லறை கடைகளை திறந்து இருக்கிறார்கள். மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக இந்த அரசு இருக்கிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலையில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது மேற் கூரையை பிரித்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அவர்களை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. அக்கம்பக்கத்தினரின் முயற்சியால் அவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை நீங்கள் (நிருபர்கள்) கேள்வியாக எழுப்புவீர்கள் என்ற காரணத்திற்காக முதல்-அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கின்றார்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மு.பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி, முன்னாள் எம்.பி.ரத்தினவேல், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.