மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை-போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை-போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x

மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சேலம்

முதல்-அமைச்சர் வருகை

தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, அவர் வேலூர் மண்டலத்தில் சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். அடுத்தகட்டமாக சேலம் மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சேலம் மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டம் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) 2 நாட்கள் நடைபெறுகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகைக்கு வந்து ஓய்வெடுக்கிறார்.

ஆய்வுக்கூட்டம்

இதையடுத்து மாலை 4.30 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு விவசாயிகள் மற்றும் தாட்கோ திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சரக டி.ஐ.ஜி., 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து கூட்டத்தை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சேலத்தில் தங்குகிறார். இதையடுத்து 2-வது நாளாக நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசுத்துறை அதிகாரிகளுடன் கள ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக அவர் சேலம் மாநகராட்சி மணக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், ஆய்வுக்கூட்டம் நடக்கும் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசு ஆஸ்பத்திரி, ரேஷன் கடை, போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்று ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயாராக உள்ளனர்.


Next Story