முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் வரவேற்பு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரக்கோணம்
வேலூரை அடுத்த கந்தனேரியில் தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.
இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார்.
அப்போது மாநில சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் வினோத்காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேல், அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர், அரக்கோணம் நகர செயலாளர் ஜோதி மற்றும் கட்சியினர் மேளதாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்-அமைச்சர் வருகையொட்டி அரக்கோணத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்-அமைச்சரை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் பார்த்து மகிழ்ச்சியினை தெரிவித்து பேசினர்.