முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை-கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை-கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 10:33 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகிறார். அவர், கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்.

சேலம்

முதல்-அமைச்சர் வருகை

சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகிறார்.

முதல் கட்டமாக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.

கருணாநிதி சிலை திறப்பு

இரவு சேலத்தில் தங்கும் அவர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன்பிறகு அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி.மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்.

அரசு நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

தொடர்ந்து மேட்டூருக்கு செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். அதற்காக மேட்டூர் அணையில் பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணம்பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு அவர் செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story