எழுத்தாளர் இமையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


எழுத்தாளர் இமையத்திற்கு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், ஆசிரியருமான‌ இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தனது முதல் நாவலான‌ 'கோவேறு கழுதைகள்' மூலம் தமிழ் இலக்கிய தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார். இமையத்தின் செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற‌ன. ஆங்கிலம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக 2020ம் ஆண்டுசாகித்திய அகாட‌மி விருது இமையத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் கன்னட தேசிய கவி குவெம்பு பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் 'குவெம்பு தேசிய விருது' இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 29ம் தேதி (குவெம்பு பிறந்த தினம்) நடைபெறும் விழாவில் இமையத்துக்கு இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என குவெம்பு அறக்கட்டளையின் செயலாளர் கடிலால் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவில்,

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும் என பதிவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story