கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். 10 பேருக்கு மேல் கூடினால் முககவசம் கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 3 அலைகளாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நன்றாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 26-ந்தேதி அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, பொது இடங்களில் முககவசத்தை கட்டாயமாக்கியது. மேலும், மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.

ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பரவலும் வேகமெடுக்கிறது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 2,385 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய தொற்று பரவல் நிலை குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உத்தரவுகள் பிறப்பிப்பு

கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார். அதாவது, துறை சார்ந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடைபெறும் போது, அதில் 10 பேருக்கு மேல் பங்கேற்றால், கண்டிப்பாக அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும், பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், அதில் பங்கேற்பவர்களும், பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பிலும், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கட்டாயம்

அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர்களும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகளும், மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story