'தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என சென்னையில் நடந்த மியூசிக் அகாடமி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு விழா மற்றும் இசை விழா மயிலாப்பூரில் உள்ள இந்த அகாடமியில் கலை அரங்கில் நேற்று நடந்தது.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், இசைக்கலைஞர் நெய்வேலி சந்தான கோபாலன், மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், வயலின் கலைஞர்கள் லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கினார்.

வேற்றுமையில் ஒற்றுமை

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் இருக்கக்கூடிய இசைக்கலை மன்றங்களில் மிக முக்கியமானதாக இருக்கக் கூடியது மியூசிக் அகாடமி. முதல்-அமைச்சர் என்ற அந்த அடிப்படையில் நான் வரவில்லை. இசை ஆர்வலன் - இசை ரசிகன் என்ற அடிப்படையில் வந்துள்ளேன். அதற்காக நான் இசைக் கலைஞரோ - இசை அறிஞரோ அல்ல. எனது தாத்தா முத்துவேலர் ஒரு இசைவாணர். பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் வல்லவராக இருந்திருக்கிறார்.

கருணாநிதி இசை கற்க சென்றாரே தவிர தொடர்ச்சியாக அதை கற்றுக் கொள்ளவில்லை. இசை ஞானம் அதிகம் கொண்டவராக கருணாநிதி இருந்தார். ஆனால் எனக்கு பேச்சுக் கச்சேரி பண்ணத் தெரியும் - பாட்டுக் கச்சேரி தெரியாது.

படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம். எங்களின் விழாக்கள் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று மியூசிக் அகாடமி முரளி கூறியிருக்கிறார். இந்த கருத்துதான் இன்று நாட்டுக்கு தேவை.

பக்தி இசை

இந்த கொள்கையை அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நினைத்து விடக்கூடாது. கலை அமைப்புகளின் கொள்கையாக - ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும். எதிரொலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம், அதாவது டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள இசைப் பறவைகளை சென்னையை நோக்கி வரவழைக்கக்கூடிய ஒரு வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி செயல்பட்டு வருகிறது.

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழை பிரிப்பார்கள். இந்த முத்தமிழில் முதலில் பிறந்தது நாடகம்தான் என்று கருணாநிதி கூறுவார். ஆதிமனிதனின் முதல் மொழி சைகையே. அதனால்தான் முதலில் பிறந்தது நாடகம். அவனது ஒலிக்குறிப்புகள் இசையை உருவாக்கியது. அதன் பிறகுதான் எழுத கற்றுக்கொண்டான். அந்த வகையில் நாடகம் - இசை - இயல் என்பதே சரியான வரிசை என்று கருணாநிதி சொன்னார்.

தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும்.

தமிழ் இசை

பக்தி இசையாக இருந்தாலும், திரையிசையாக இருந்தாலும் மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல தமிழ் வளர்த்தலும்தான் என்பதை மனதில் அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்சினையில்லாமல், எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், எந்த டென்ஷனும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், அது இந்த நிகழ்ச்சியாகத்தான் அமைந்திருக்கிறது

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் 'மியூசிக்' அகாடமியின் தலைவரும், 'தி இந்து' நாளிதழ் இயக்குனருமான என்.முரளி வரவேற்று பேசினார்.

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், 'மியூசிக்' அகாடமியின் துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன், செயலாளர்கள் வி.ஸ்ரீகாந்த், துணைவேந்தர் டாக்டர் எஸ்.சவுமியா மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர்.


Next Story