காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை வேலூரில் திடீரென ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அதைத் தொடர்ந்து காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதியும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
2-வது நாளான நேற்று காலை 7 மணி அளவில் வேலூரில் அவர் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டார்.
வாகனத்தில் சென்று சத்துவாச்சாரி டபுள்ரோடு பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் நகர் நலமையத்தை பார்வையிட்டார். அங்கு கட்டிட பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் கேட்டறிந்தார்.
உணவை சுவைத்து பார்த்து...
அதைத்தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காலை உணவு திட்ட ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். அங்கு சமையல் செய்யப்படும் விதம் குறித்தும், பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் சத்துவாச்சாரி காந்திநகரில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு காலை உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டார். மேலும் அவர் அந்த உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும் காலை உணவு திட்டத்தில் எத்தனை மணிக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் காலை உணவு திட்டம் தொடர்பான செயல்பாடுகளை பிரத்யேகமான மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் உணவு எத்தனை மணிக்கு வருகிறது?, குழந்தைகள் சாப்பிடும் நேரம் அதை புகைப்படமாக எடுத்து அந்த இணையதளத்தில் பதிவிடுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தும் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவின் தரத்தை பரிசோதனை செய்து, குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.
ஆசிரியர்களுக்கு அறிவுரை
அப்போது உணவு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி உணவு வகைகளை வழங்க வேண்டும். உணவினை காலை 6.30 மணிக்கு தயாரிக்க வேண்டும். அது காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் பரிமாறப்பட வேண்டும்.
மாணவர்களை காக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பரிமாற வேண்டும். உணவு உண்ணும் மாணவர்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சத்தான மற்றும் தரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்கிட அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவரிடம் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் சிலரிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். பொதுமக்கள் சிலர் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.