பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்


பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்
x

பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பெரம்பலூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர், பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 112 மாணவ-மாணவிகளுக்கு நேற்று தொடங்கப்பட்டது. இதில் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டதுடன், அவர்களுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். வெள்ளிக்கிழமையான நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி (இனிப்பு) ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.

முன்னதாக முத்துநகர் பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.25 லட்சத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய சமையல் அறை கூடத்தை அமைச்சர் சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் சமையல் அறையில் சங்குப்பேட்டையில் உள்ள பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு), கடைவீதியில் உள்ள பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(மேற்கு) ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்ட காலை உணவுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நவீன ரக பேட்டரி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணை தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story