சென்னை மாநகராட்சி பகுதியில் மேம்பாட்டு பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்ணா நகர் மண்டலம் செனாய் நகர் பகுதியில் ரூ.12.90 கோடியில் கட்டப்பட்டு வரும் 100 படுக்கைகளுடன் கூடிய நகர்ப்புற சமுதாய சுகாதார மைய கட்டிடத்தை பார்வையிட்ட இறையன்பு, அந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அம்பத்தூர் மண்டலம் டி.சி.எஸ். பூங்காவில் மரக்கன்றுகள் நடுதல், பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
பள்ளி கட்டிடம்
கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்சி 1 சாலையில் ரூ.61.98 கோடியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணியினையும், ரூ.43.46 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளையும் பார்வையிட்டார்.
ராயபுரம் மண்டலம், பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.4.53 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், சீர்மிகு வள வகுப்பறைகள் உள்ளிட்டவற்றையும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் பணி
இதன்பின்பு, எண்ணூர் விரைவு சாலையில் ரூ.47.62 கோடியில் சிப்பம் 42-ல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக திருச்சினாங்குப்பம் சந்திப்பு சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, மணலி விரைவுச்சாலையில் ரூ.118.02 கோடியில் சிப்பம் 38-ல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக சடையங்குப்பம் நெடுஞ்சாலை, சந்திப்பு ஜோதிநகர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றையும் தலைமைச் செயலாளர் இறையன்பு பார்வையிட்டார்.
ராயபுரம் மண்டலம், வார்டு 59, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் எஸ்.எம்.நகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.