நோய் பரப்பும் மருத்துவக்கழிவுகள்...நாற்றமெடுக்கும் கோழிக்கழிவுகள்


நோய் பரப்பும் மருத்துவக்கழிவுகள்...நாற்றமெடுக்கும் கோழிக்கழிவுகள்
x

கணியூரில் சாலையோரங்களில் சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளத்தையடுத்த கணியூரில் சாலையோரங்களில் சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

திடக்கழிவு மேலாண்மை

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் கிராமப்புறங்களில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்து வருகின்றன.அவற்றை தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சேகரிக்கும் பணிகள் தினசரி மேற்கொள்ள வேண்டும்.அவற்றை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து, மக்கும் கழிவுகளை உரமாகவும் மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும்.இதற்கென உருவாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் பல ஊராட்சிகளில் செயல்படுத்தப்படாமல் உள்ளது.தேவையான இட வசதி மற்றும் நிதி ஆதாரங்கள் இல்லாதது இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுவதால் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.பொதுவாக மருத்துவக்கழிவுகள் பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்படுகின்றன.இந்த பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் கழிவுகளை அப்புறப்படுத்த கட்டணம் வசூலிக்கின்றன.ஆனால் ஒருசில ஆஸ்பத்திரிகளில் இந்த தொகையை மிச்சப்படுத்தும் நோக்கத்தில் மருத்துவக் கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் பொதுவெளிகளில் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.

கடும் நடவடிக்கை

அந்தவகையில் கணியூரிலிருந்து காரத்தொழுவு செல்லும் சாலை ஓரத்தில் மருந்து, மாத்திரை அட்டைகள், பயன்படுத்திய ஊசிகள், ரத்தக்கறையுடன் கூடிய பஞ்சுகள், ஆஸ்பத்திரியில் பயன்படுத்திய மெத்தைகள், பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை போட்டுச் சென்றுள்ளனர்.இவ்வாறு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அலட்சியமாக வீசிச் சென்றுள்ளதால் நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.மேலும் இதே பகுதியில் கோழி, மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகளும் வீசப்பட்டுள்ளன.அவற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அழுகிய கழிவுகளால் பலவிதமான நோய்களும் பரவும் அபாயம் உள்ளது.இதுதவிர மூட்டை மூட்டையாக பலவிதமான கழிவுகள் சாலை ஓரத்தில் அதிக அளவில் குவிந்துள்ளன.தினசரி அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் முக்கிய சாலையில், குடியிருப்புக்கு அருகில் கொட்டப்பட்ட குப்பைகளால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும் மழைக்காலங்களில் கழிவுகள் மழைநீரில் கலந்து பல பகுதிகளிலும் நோய்த்தொற்றை உருவாக்கக்கூடும்.எனவே இந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், ஆபத்தான கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story