அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை சாவு: உறவினர்கள் போராட்டம்


அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை சாவு: உறவினர்கள் போராட்டம்
x

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை இறந்தது. இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி ரம்யா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது முறையாக கர்ப்பமாக இருந்த ரம்யாவிற்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாலை 3 மணி அளவில் ரம்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், குழந்தையையும் நர்சுகள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் டாக்டர்கள் இன்றி காலதாமதமாக நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி குழந்தையின் உறவினர்கள் குழந்தையின் உடலுடன் நேற்றுமுன்தினம் இரவு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பானுமதி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story