பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து 3 வயது சிறுமி சாவு-ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
3 வயது சிறுமி
பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மெணசி பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 39). இவருடைய மனைவி காஞ்சனா. இவர்களுக்கு தேஜா ஸ்ரீ (5), சஷ்மிதா ஸ்ரீ (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் மாலை சிறுமி சஷ்மிதா ஸ்ரீ வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது அங்கிருந்த நாகப்பாம்பு சிறுமியை கடித்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாத நிலையில், 2 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது செவிலியர்கள் பாம்பு கடிக்கு இங்கு மருந்து இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
முற்றுகை
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி சஷ்மிதா ஸ்ரீ தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
இந்தநிலையில் நேற்று சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் பாம்பு கடிக்கு மருந்து இருந்தும், சிறுமிக்கு சிகிச்சை அளிக்காத டாக்டர், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரி சங்கர், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாம்பு கடித்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.