தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி
திருப்பூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியானது.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:/
குழந்தை
திருப்பூர் தண்ணீர்பந்தல்காலனி பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 35). இவருடைய மனைவி அன்னகாமு. இவர்களுடைய 2½ வயது ஆண் குழந்தை தீக்சரன். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வந்துள்ளது. அன்னகாமு வீட்டிற்கு தேவையான தண்ணீரை பிடித்துவிட்டு, தொட்டிக்கு தண்ணீரை விட்டுள்ளார்.
பின்னர் தொட்டியை மூடுவதற்கு மறந்தாக கூறப்படுகிறது. இதனால் தொட்டி திறந்த நிலையிலேயே இருந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த குழந்தை தீக்சரன் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான். இதற்கிடையில் வீட்டை விட்டு வெளிேய சென்ற குழந்தையை காணாமல் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினார்கள். பின்னர் சந்தேகத்தின் பேரில் தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியது தெரிய வந்தது.
சாவு
இதையடுத்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் 2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------------------