தேனியில் ஆற்றில் மூழ்கி குழந்தை பலி


தேனியில் ஆற்றில் மூழ்கி குழந்தை பலி
x
தினத்தந்தி 26 April 2023 9:00 PM GMT (Updated: 26 April 2023 9:00 PM GMT)

தேனியில் ஆற்றில் மூழ்கி 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியானது.

தேனி

தேனியில் ஆற்றில் மூழ்கி 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியானது.

ஆண் குழந்தை

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்திய பிரியா. இவர்களுக்கு நிலவழகி (வயது 8) என்ற மகளும், நவ்னீத் என்ற 1½ வயது மகனும் இருந்தனர்.

சசிகுமார் நேற்று தனது மனைவி, குழந்தைகளுடன் பங்களாமேட்டில் முல்லைப்பெரியாற்றுடன் கொட்டக்குடி ஆறு சந்திக்கும் கூட்டாறு பகுதிக்கு குளிக்கச் சென்றார். ஆற்றில் இருந்த ஒரு பாறையில் குழந்தை நவ்னீத்தை அமர வைத்துவிட்டு சத்தியபிரியா துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். சசிகுமாரும், நிலவழகியும் அதே பகுதியில் குளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நீரில் மூழ்கி பலி

சிறிது நேரத்தில் பாறையில் அமர்ந்து இருந்த குழந்தை நவ்னீத்தை காணாமல் அவர்கள் திடுக்கிட்டனர். குழந்தை தண்ணீரில் விழுந்திருக்கலாம் என்று கருதி ஆற்றுக்குள் தேடினர். அங்கு குளிக்க வந்த பொதுமக்களும் சேர்ந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்று நீருக்குள் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. ஆனால் அந்த குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தது. உடனே குழந்தையை தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

அங்கிருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். அது காண்போர் கண்களையும் குளமாக்கியது.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து சசிகுமார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1½ வயது குழந்தை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பங்களாமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story