குழந்தை-கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை விழிப்புணர்வு
கிராம சபை கூட்டங்களில் குழந்தை தொழிலாளர் முறை, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களில் குழந்தை தொழிலாளர் முறை, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிராம சபை கூட்டம்
தொட்டம்பட்டி, குறிச்சிக்கோட்டை, பொங்கலூர், அரசம்பாளையம், பொங்குபாளையம், நங்கியாம்பாளையகம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து தொழில்களில் குழந்தைகளும், அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரை அகற்றுவது குறித்து சமூக பங்கேற்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சிகள், நகராட்சி, மாநகராட்சிகளில் வெளியிடப்படும் பணி ஒப்பந்தங்களில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுயசான்று பெற அறிவுறுத்தப்பட்டது.
அரசு மூலம் அறிவிக்கும் ஒப்பந்த பத்திரத்தில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு எதிரான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இடம்பெற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.
இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-