குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் - கலெக்டர் உமா எச்சரிக்கை


குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் - கலெக்டர் உமா எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2023 7:00 PM GMT (Updated: 13 Jun 2023 10:13 AM GMT)

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.

நாமக்கல்

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கையெழுத்து இயக்கம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் உமா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 768 நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் 4 நிறுவனங்களில் 14 வயதிற்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட 13 வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் அபராதம்

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் பணிபுரிகின்றார்களா? என்பது பற்றி தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விதிக்கப்படுகிறது. எனவே தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் அமர்த்தப்படுவதை தவிர்த்து, குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் உமா தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story