குழந்தை இல்லாத தம்பதியினர் பொங்கல் வைத்து வழிபாடு


குழந்தை இல்லாத தம்பதியினர் பொங்கல் வைத்து வழிபாடு
x

புனித பெரிய நாயகி மாதா ஆலயத்தில் குழந்தை இல்லாத தம்பதியினர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பெரியதம்பி உடையான்பட்டியில் புனித பெரிய நாயகி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6-ந் தேதி குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். குழந்தை வரம் கிடைத்தவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரிய தம்பி உடையான் பட்டி தேவாலயம் அருகே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தம்பதிகளாக ஒன்று சேர்ந்து புதிய பானையில் பொங்கல் வைத்து குழந்தை வரம் வேண்டி தேவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர். இதையே 3 அரசர்கள் பொங்கல் விழா என அழைக்கப்படுகிறது.

மேலும், இந்த கிராமத்தில் பிறந்து வெளியூர்களில் திருமணம் செய்து வசித்து வரும் பெண்கள் தங்களது கணவரோடு சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இதேபோல் குழந்தை வரம் கிடைத்த தம்பதியினர் மாதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மும்மதத்திலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொங்கல் வைத்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ஆலங்குடி அருகே பாத்திமா நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்தனர்.


Next Story