குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கதைகள் வாசிக்க கற்றுத்தர வேண்டும்
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கதைகள் வாசிக்க கற்றுத்தர வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வு
அரக்கோணத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.1¾ கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி, கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அந்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தையும் பார்வையிட்டு பொதுமக்களிடம் மருத்துவ சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து குறிஞ்சி நகர் முதல் தெருவில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க பயிற்சி நிலைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
கற்றுத்தர வேண்டும்
பின்னர் அரக்கோணத்தை அடுத்த காவனூரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். அப்போது 13 ஆயிரத்து 600 குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிக்க இலக்காக கொண்டுள்ளதை அலுவலர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு பரிசோதித்தார். அப்போது, குழந்தைகளுக்கு வழங்கும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கதைகள் மற்றும் கவிதைகளை வாசிக்க கற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமயற்கூடம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையர் லதா, நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகராட்சி என்ஜினீயர் ஆசிர்வாதம், இயக்குனர் மோசஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.