14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் நடவடிக்கை


14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை  வேலைக்கு அனுப்பினால் நடவடிக்கை
x

குமரி மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள்

2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கான குழந்தைகள் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு 1986-ம் ஆண்டு குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த சட்டத்தின்கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித வேலைக்கு அனுப்புவதும், 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமாகவோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

நடவடிக்கை

இந்த சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கு தண்டனை வழங்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2-வது முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கும் அல்லது பாதுகாவலருக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவனங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த வித வேலைக்கும் அனுப்புவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தவோ கூடாது.

இவ்வாறு அதில் கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.


Next Story