பல வழக்குகளில் சந்தேகங்களை தீர்ப்பதற்கு குழந்தைகளின் சாட்சிகள் உறுதுணையாக இருக்கிறது: நீதிபதி பேச்சு
பல வழக்குகளில் சந்தேகங்களை தீர்ப்பதற்கு குழந்தைகளின் சாட்சிகள் உறுதுணையாக இருக்கிறது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் கூறினார்.
விசாரணை மையம்
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதிக்கப்படகூடிய மற்றும் குழந்தை சாட்சிகள் விசாரணை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், கரூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், கரூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான குமரேஷ்பாபு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சக்திவேல், தனபால், கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இடையூறு வந்துவிடும்
பின்னர் கரூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:- குழந்தைகளின் சாட்சிகள் இன்றைக்கு பல வழக்குகளில் இன்றியமையாத சாட்சிகளாக மாறியுள்ளது. பல வழக்குகளில் குழந்தைகளுடைய சாட்சிகள்தான் வழக்கில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து நீதிபதி முடிவுக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.அப்படி பாதிக்கப்பட கூடிய, பாதிக்கப்பட்டுள்ள சாட்சிகள், குழந்தை சாட்சிகள் ஆகியோர் மிக முக்கிய சாட்சிகளாக ஒரு வழக்கில் வரும்போது, அவர்கள் சூழல்நிலை சரியில்லாத காரணத்தால், சரியான முறையில் சாட்சியத்தை பதிவு செய்ய முடியாமல் போனால் அந்த வழக்கிற்கு இடையூறு வந்துவிடும்.
2-வது மையம்
எனவே இதுபோன்ற சூழல் வந்துவிடக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் இதுபோன்ற மையங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மையங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் திருவண்ணாமலைக்கு அடுத்தப்படியாக கரூரில் தான் 2-வதாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வரும் சாட்சிகளுக்கு குறைந்த பட்சம் பாதுகாப்பு என்ன என்று மனதில் தோன்றுகிறது அதன் வெளிப்பாடு தான் இந்த விசாரணை மையம். ஏறத்தாழ ரூ.3.30 கோடிக்கு மேல் அரசு செலவு செய்து இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவா் கூறினார்.
பனைவிதைகள் நட்டனா்
முன்னதாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள், பனை விதைகளை நீதிபதிகள் நட்டு வைத்தனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன், அரசு வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.