பருவ மழை பெய்யாததால் மிளகாய் விவசாயிகள் ஏமாற்றம்


பருவ மழை பெய்யாததால் மிளகாய் விவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீசன் தொடங்கியும் பருவ மழை பெய்யாததால் மிளகாய் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

ராமநாதபுரம்

சாயல்குடி

சீசன் தொடங்கியும் பருவ மழை பெய்யாததால் மிளகாய் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மிளகாய் விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மழையை நம்பி தான் இங்கு விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. அதுபோல் நெல் விவசாயத்தை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல், இதன்பாடல், ஏர்வாடி, காவாக்குளம், ஆயக்குடி, மேல கிடாரம், கீழக்கிடாரம், தேர்வேலி, திரு உத்தரகோசமங்கை, காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலும் மிளகாய் விவசாயத்தில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது மிளகாய் சீசன் தொடங்கியுள்ளது. சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல், ஆயக்குடி, கீழக்கிடாரம், மேல கிடாரம், கழநீர்மங்கலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் விவசாயிகள் மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிளகாய் செடிகளை சுற்றி வளர்ந்து நிற்கும் களைகளையும் வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமாற்றம்

இந்த ஆண்டு தற்போது பருவமழை சீசன் நடைபெற்று வரும் நிலையிலும் போதிய அளவு மழை பெய்யாததால் மிளகாய் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தவமுருகன் கூறியதாவது, இந்த ஆண்டு பருவ மழை சீசன் தொடங்கி ஒரு மாதம் முடிந்த பின்னரும் அந்த அளவு மழை பெய்யவில்லை. போதிய அளவு மழை பெய்யாததால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை சீசன் தொடங்கியபோது ஒரு ஏக்கரில் மிளகாய் விதைகளை தூவினேன். ஆனால் மழை பெய்யாததால் மிளகாய் செடி வளரவே இல்லை. அதனால் தற்போது மிளகாய் செடிகளை விலைக்கு வாங்கி மீண்டும் ஒரு ஏக்கரில் நட்டு உள்ளேன். மழை மிக குறைவு. மிளகாய் செடிகள் வளர அதிக மழை தேவை இல்லை என்றாலும் கொஞ்சம், கொஞ்சம் மழை பெய்தால் தான் மிளகாய் செடியும் நன்றாக வளரும். மிளகாய் விளைச்சலும் இருக்கும்.

எதிர்பார்த்து...

கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்தது. மிளகாய் விளைச்சலும் நன்றாக இருந்தது. ஆண்டுதோறும் மழையை எதிர்பார்த்து மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். மழை பெய்தால் தான் எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாயிலும் தண்ணீர் அதிகரிக்கும். கண்மாயில் பெருகும் தண்ணீரை வைத்து தான் விவசாயத்தில் ஈடுபடுவோம். ஆனால் இந்த ஆண்டு கண்மாயிலும் தண்ணீர் இல்லாததுடன், மழையும் பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பருவமழை சீசன் நடைபெற்று வரும் நிலையிலும் சாயல்குடி சுற்றிய பல ஊர்களிலும் இன்னும் போதிய அளவு மழை பெய்யாததால் சிக்கல், ஆயக்குடி, மேலகிடாரம், கீழக்கிடாரம், கொத்தங்குளம் உள்ளிட்ட பல ஊர்களிலும் மிளகாய் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து இருந்து வருகின்றனர்.


Next Story