நிலையான வருமானம் தரும் மிளகாய் சாகுபடி பணி தீவிரம்


நிலையான வருமானம் தரும்  மிளகாய் சாகுபடி பணி தீவிரம்
x
திருப்பூர்


தளி பகுதியில் நிலையான வருமானம் தரும் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மிளகாய் சாகுபடி

உடுமலை அமராவதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள், பருவமழை விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு தென்னை, வாழை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட நீண்டகால பயிர்களும், தானியங்கள், அன்றாட வருமானம் தரக்கூடிய கீரைவகைகள், காய்கறிகளை விவசாயிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தளி பகுதியில் தற்போது மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நிலையான வருமானம்

மிளகாய் சாகுபடி செய்வதற்கு ஜனவரி- பிப்ரவரி, ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் ஏற்றதாகும். நிலையான வருமானம் இருப்பதால் ஒரு சில விவசாயிகள் ஆண்டுதோறும் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி செய்த நாளில் இருந்து 75 முதல் 105 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். அதைத் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் வரையிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மிளகாயை அறுவடை செய்யலாம். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் மிளகாய்க்கும் தனி இடம் உண்டு.

ஆண்டு முழுவதும் பல்வேறு வடிவத்தில் அதன் பயன்பாடு உள்ளதால் சீரான விலையும் கிடைக்கிறது.எனவே மிளகாய் சாகுபடியில் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் கூலியாட்கள் பற்றாக்குறையால் செடிகள் பராமரிப்பு, உரமிடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்தில் செய்ய முடிவதில்லை. இதனால் மிளகாய் செடி மட்டுமல்லாமல் எந்த ஒரு பயிர்களின் வளர்ச்சியும் விளைச்சலும் குறைந்து விடுகிறது. எனவே விவசாய பணியில் நிலவுகின்ற கூலியாட்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

காய்கறிகளுக்கு நல்ல விலை

இதேபோன்று பி.ஏ.பி. 2- ம் மண்டல பாசனத்தில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக காய்கறிகளுக்கு ஓரளவுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

இதனால் விவசாயிகள் செடிகளை பராமரித்து விளைச்சலை பெருக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு அதை சார்ந்துள்ள கூலித்தொழிலாளிகளுக்கும் வருமானம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story