கிராமங்களில் மிளகாய் சாகுபடி பணிகள் தீவிரம்


கிராமங்களில் மிளகாய் சாகுபடி பணிகள் தீவிரம்
x

கிராமங்களில் மிளகாய் சாகுபடி பணிகள் தீவிரம்

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் பயிர் விவசாயத்தை விட மானாவரி சாகுபடி பயிர்களான மிளகாய், பருத்தி, எள் கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களே அதிகம் விவசாயம் செய்யப்படுகின்றது. அதிலும் குறிப்பாக முதுகுளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் அதிக அளவில் மிளகாய் விவசாயம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி, மட்டியாரேந்தல், காக்கூர் வடக்கு மல்லல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழுது மிளகாய் விதைகளை தூவும் பணியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி தேரிருவேலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தாமரை கண்ணன் கூறியதாவது, கடந்த ஆண்டு 1 ஏக்கரில் மிளகாய் விவசாயம் செய்திருந்தேன். நல்ல விளைச்சல் இருந்ததுடன் அதிக விலையும் கிடைத்தது. தற்போது இந்த ஆண்டு பருவமழையை எதிர்பார்த்து முன்கூட்டியே மிளகாய் விதைகளை தூவி வருகிறோம்.

தற்போது மழை பெய்ய தொடங்கினால் விவசாய நிலங்களில் தூவப்பட்டுள்ள விதைகள் ஓரளவு செடிகளாக வளர பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டும் மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story