அய்யம்பேட்டை பகுதியில் மிளகாய் அறுவடை தீவிரம்


அய்யம்பேட்டை பகுதியில் மிளகாய் அறுவடை தீவிரம்
x

அய்யம்பேட்டை பகுதியில் மிளகாய் அறுவடை தீவிரம்

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை பகுதியில் மிளகாய் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் விளைச்சல் மற்றும் விலைகுறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மிளகாய் பயிர் சாகுபடி

இந்திய சமையலில் முக்கியமான இடத்தை வகிக்கும் சுவை காரம். இந்த சுவைக்காக சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவையே. இன்றளவும் பல கிராமங்களில் காலை உணவாக பச்சை மிளகாயும், பழைய சோறும் சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அய்யம்பேட்டை அருகே குடிக்காடு, கருப்பூர், புத்தூர், மேட்டுத்தெரு, நாயக்கர் பேட்டை, இளங்கார்குடி, கூடலூர், பட்டுக்குடி ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு கிராமங்களான மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய ஊர்களிலும் ஏராளமாக மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. படுகை நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட பச்சைமிளகாய் தற்போது வயல்வெளிகளிலும் (நஞ்சை நிலங்கள்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.

மிளகாய் அறுவடை பணி

இந்த பகுதியில் தற்போது தீவிரமாக மிளகாய் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் விளைச்சல் குறைந்து, விலையும் கட்டுப்படி ஆகவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து அய்யம்பேட்டை அருகே மிளகாய் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:- கடந்த பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றோம். டீசல் விலை உயர்வு, கூலி ஆட்கள் சம்பளம், உரம் போன்றவற்றிற்காக ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.75 ஆயிரம் வரை ஆகின்றது. இந்தப்பகுதியில் தற்போது தீவிரமாக பச்சைமிளகாய் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த பச்சை மிளகாயை தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவையாறு ஆகிய ஊர்களில் உள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம்.

ஒரு கிலோ ரூ.25 வரை விலை

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத தொடக்கத்தில் மிளகாய் கன்றுகளை நடவு செய்து விடுவோம். தற்போது இப்பகுதியில் அடிக்கும் கடுமையான வெயிலால் பூக்கள் கருகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. தற்போது ஒரு கிலோ மிளகாய் ரூ.20 முதல் ரூ. 25 வரை மட்டுமே விலைபோகிறது. இந்த தொகையில் பெரும் பகுதி மிளகாய் பறிக்கும் கூலி, வாகன வாடகை, கமிஷன் என செலவாகி விடும். ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்றால் மட்டுமே ஒரளவாவது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மேலும் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் நூறு நாள் வேலைக்கு சென்று விடுவதால் மிளகாய் பறிப்பதற்கு கூலியாட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். விவசாய வேலை இல்லாத நாட்களில் மட்டும் நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும். நெல், கரும்பு போல மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story