மிளகாய் அறுவடை பணி தீவிரம்
கடலூர் அருகே மிளகாய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் அருகே உள்ள உச்சிமேடு, நாணமேடு, கண்டக்காடு உள்ளிட்ட பகுதி மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் நாணமேடு பகுதி விவசாயிகள் தற்போது கத்தரி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களையும், கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற மலர் வகை பயிர்களையும் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது 3 மாத பயிரான மிளகாய் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
அதனை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் அறுவடை செய்த மிளகாயை தரம் பிரித்து உழவர் சந்தைக்கும், காய்கறி மார்க்கெட்டுகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மிளகாய் வயலில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. இதனால் செடிகளில் இருந்த காய்கள் அதிகளவில் உதிர்ந்து விட்டன. மேலும் பூக்களும் உதிர்ந்து விட்டதால், கடந்த ஆண்டை விட தற்போது மகசூல் குறைந்துள்ளது. இது அதிக செலவு செய்த பராமரித்த விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.