மிளகாய் கிலோ ரூ.110-க்கு விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் மிளகாய் கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
காய்கறி விலை உயர்வு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.100-க்கும், அவரை ரூ.80-க்கும், பாகற்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.100-க்கும், கேரட் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து வரும் நிலையில், மிளகாய் விலையும் ரூ.100-ஐ தாண்டி இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். கடந்த 3-ந் தேதி மிளகாய் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் இதே விலை நீடித்தது.
இல்லத்தரசிகள் கண்ணீர்
மிளகாய் வரத்து வெகுவாக குறைந்து இருப்பதால், அதன் விலை உயர்ந்து வருவதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். மிளகாய் காரம் அதிகமாக இருந்தால், குழம்பில் சேர்த்து சாப்பிடும்போது கண்ணீர் வரும். ஆனால் தற்போது விலையை கேட்டாலே கண்ணீர் வருவதாக இல்லத்தரசிகள் கூறினர்.