சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை
சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை
துடியலூர்
கோவை கோர்ட்டு உத்தரவின்படி சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மறு ஓட்டு எண்ணிக்கை வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
சின்ன தடாகம் ஊராட்சி
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு |டிசம்பர் மாதம் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா கை உருளை சின்னத்திலும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்தர வடிவு பூட்டு சின்னத்திலும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையின் போது நீண்ட இழுபறிக்கு பின்னர் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்தர் வடிவு 3 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மீண்டும் ஓட்டு எண்ணிக்கை
இதற்கு சுதா மறுப்பு தெரிவித்து மனு அளித்தார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்த நிலையில் வேட்பாளர் சுதா கோவை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் சவுந்தர வடிவு வெற்றி பெற்றதை ரத்து செய்து மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி ராஜசேகர் சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும்.
இந்த மறுஓட்டு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து அதன் முடிவை கோர்ட்டில் மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
வருகிற 24-ந்தேதி நடக்கிறது
இதை தொடர்ந்து வருகிற 24-ந்தேதி தேதி துடியலூர் அருகில் உள்ள குருடம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அருணா நகர் சமுதாயக்கூடத்தில் மதியம் 12.30 மணிக்கு சின்னதடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் சம்பந்தப்பட்டவர்களுக்கு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.